Monday, October 31, 2011

பிரபல எழுத்தாளன் எழுதியது ( சவால் சிறுகதை-2011)

நான் திடீரென ஒரு பிரபல எழுத்தாளராகிவிடலாம் என்று முடிவு செய்துவிட்டேன். கொஞ்சம் இருங்கள். உடனே நான்வேலைவெட்டி இல்லாமல் இருப்பதாகத் தானே நீங்களே கற்பனை செய்கிறீர்கள். அது தான் இல்லை. நானும் ஒரு வேலை பார்க்கிறேன். என்ன வேலையா? இந்தக் காலத்தில் எங்கேயும் தென்படும் கணிபொறி வேலைபார்க்கும் இளைஞர்களில் நானும் ஒருவன்.

இப்போதெல்லாம் கணிப்பொறி வேலை என்று சொல்லும்போதே கொஞ்சம் மொக்கையாக இருக்கிறதல்லவா, அதனால் தான் ஏதாவது வித்தியாசமாக செய்யவேண்டும் என முடிவு செய்தேன். அப்போது கிடைத்த ஐடியா தான் எழுத்தாளர் ஆவது.

இதற்கு இன்னொரு காரணமும் உண்டு. எழுத்தாளர்கள் எல்லாம் இப்போது கணிப்பொறியில் தான் விளையாடுகிறார்கள், வலைப்பூ, மின்னஞ்சல் மற்றும் வாசகர் வட்டம் என்று. அவர்கள் கணிப்பொறியை எடுத்துக் கொண்டதால் நான் எழுத்தை எடுத்துக்கொள்வதும் சரியானதே என முடிவு செய்தேன். பழிக்குப் பழி.


ஆனால் எனக்கு கிடைக்கும் நேரம் கொஞ்சம் தான். இருந்தாலும், சாப்பாட்டு இடைவெளியில் எழுதியே சாகித்ய ஆகாடமி விருது வாங்குவது தான் எனது லட்சியம்.----


எனக்கு கொஞ்சம் கொஞ்சமாக வளருவதெல்லாம் பிடிக்காது. எப்படி "திடீர்" புகழ் அடைவது என்று நான் யோசித்துக்கொண்டிருந்தபொழுதுதான் தமிழ் இலக்கிய உலகில் ஒரு மாபெரும் சர்ச்சை ஏற்பட்டது. வழக்கம் போல எழுத்தாளர் ஜெயராமன் ஒரு சர்ச்சை குண்டை வீசினார்.


அவர் சொன்னது இது தான் "கமல்ஹாசனை உலகநாயகன் என்றெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது. அவரை வெறும் நாயகன் என்று வேண்டுமானால் சொல்லிக்கொள்ளுங்கள். அதுவும் அவர் நாயகன் என்ற படத்தில் நடித்தார் என்பதற்காக. ஆனால் உலக நாயகன் என்று தயவுசெய்து சொல்லாதீர்கள்!"


இந்தக் கருத்து தமிழ் இலக்கிய, பத்திரிக்கை மற்றும் சினிமா உலகில் பெரும் பரபரப்பைக் கிளப்பியது. ஆனால் எழுத்தாளர் ஜெயராமனோ பின்வாங்குவதாக இல்லை. தன் கருத்தில் உறுதியாக இருந்தார். அதற்கான தரவுகளையும் தந்தபடி இருந்தார்.


ஆனால் எதிர் தரப்பும் சும்மா இல்லை. ஜெயராமன் எழுதும் ஒவ்வொரு பதிவுக்கும் பதில்பதிவு போட்டு அவரது முகத்திரையை கிழிப்பதையே முழுநேர இலக்கியப் பணியாகக் கொண்ட எழுத்தாளர் தான் சூரப்புலி கோகுல். அவர் வழக்கம்போல ஜெயராமனின் இந்தக் கருத்தையும் பலமாக எதிர்த்தார்.


"நாயகன் படத்தில் நடித்ததால் கமல் நாயகன் என்றால், அதே பெயரில் ஜே.கே. ரித்திஷ் கூட ஒரு படம் நடித்து இருக்கிறார். அப்படியென்றால் கமலும் ரித்தீசும் இவரின் அளவுகோல்படி சமம் தானே? " என்ற கேள்வியை எழுப்பினார்.


ஆனால் எழுத்தாளர் ஜெயராமனுக்கு தமிழில் பிடிக்காத வார்த்தை "சமம்". எல்லாவற்றிலும் ஒரு ரசனை தரம் பிரித்தல் இருக்கவேண்டும் என்பதே அவரது கருத்து. எல்லோரும் பிரம்மா. விஷ்ணு மற்றும் சிவன் என்று வழிபட்டுக் கொண்டிருக்க. எழுத்தாளர் ஜெயராமன் "விஷ்ணுதரம்" என்ற பிரம்மாண்டமான நாவலை எழுதினார்.

இந்த நாவலில் விஷ்ணுவின் தரம் பற்றியே ஒரு விவாதத்தை நடத்தியிருந்தார். இந்த நாவல் பெற்ற புகழால் எழுத்தாளர் ஜெயராமனின் வாசகர்கள் "விஷ்ணுதர வாசகர் வட்டத்தை" அமைத்தனர் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.


இன்னொரு பரபரப்பு எழுத்தாளர் ஆறு. இந்தப் பிரச்சனையில் இவரின் ஆதரவு எப்போதும் சூரப்புலி கோகுலுக்கு உண்டு. ஆனால் இவர் நேரடியாக கருத்து சொல்வதில்லை. ஏனென்றால் ஜெயராமனின் எழுத்துக்களைப் படித்தாலே ஆறு தூங்கிவிடுவதுண்டு. அப்புறம் எப்படி பதில் எழுதுவது.
விவாதம் நடத்துவது?


----


இது இன்றைய இலக்கிய நிலைமை. இந்த சூழ்நிலையில் நானும் ஒரு பரபரப்பான எழுத்தாளராக ஆகவேண்டும் என்றால் இந்த மூன்று எழுத்தாளர்களை விட ஏதாவது செய்தால் தான் உண்டு . அப்போது தான் எனக்கு ஒரு வாய்ப்பு இருப்பது தெரிந்தது.


இப்படி பரபரப்பை உருவாக்கிவந்த ஜெயராமனுக்கும் ஒரு சோதனை வந்தது. அவர் வாசர்கள் உருவாக்கிய வாசகர் வட்டமான விஷ்ணுதர வாசகர் வட்டம் பற்றி பார்த்தோம் அல்லவா. அந்த ரகசிய வாசகர் வட்டத்தில் எழுதப்பட்ட பல மின்னஞ்சல்கள் எழுத்தாளர் ஆறுவின் தளத்திலும், சூரப்புலி கோகுல் தளத்திலும் வெளிவரத்தொடங்கின. விஷ்ணுதர நிர்வாகிகள் கொதித்து எழுந்தனர். கடுமையான நடவடிக்கை எடுத்து பலரை நீக்கினர். ஆனாலும் அதில் யாரோ ஒரு இன்போர்மேர் இருப்பது போன்ற சந்தேகம் எல்லோருக்கும் இருந்தது.


எழுத்தாளர் ஜெயராமன் வசனம் எழுதும் அடுத்த படத்துக்கான பெயர் அடுத்த வாரம் வெளியிடப் படும் என அறிவிப்பு வந்திருந்தது. ஆனால் அதை முன்னடியே வெளியிட்டு ஜெயராமனின் முகத்திரையை கிழிக்கவேண்டும் என சூரப்புலி கோகுலும், எழுத்தாளர் ஆர்வம் கொண்டிருந்தனர். இதில் யார் முந்துவது என்ற போட்டிகூட இருந்ததாகக் கேள்வி (இதனால் எல்லாம் எப்படி முகத்திரை கிழியும் என்று யோசித்தால் நீங்கள் இலக்கிய உலக சர்ச்சைகளைப் பற்றி அறியாத அப்பாவி)


இந்த செய்தியும் விஷ்ணுதர வட்டத்திலிருந்து கசியும் வாய்ப்பு இருப்பதாக அறிந்தேன். இந்த நிலைமையை எனக்கு சாதகமாக பயன்படுதுக்கொள்ள தீர்மானித்தேன். எப்படியாவது அந்தப் பெயரை அவர்களுக்கு முன்னால் நான் வெளியிட்டால், தான் தான் தமிழ் இலக்கியத்தில் பரபரப்பான ஆள். எப்படி என் கணக்கு.


இப்போது என் கணிபொறி மூளையை பயன்படுத்த ஆரம்பித்தேன். எப்படியும் இந்த இருவருக்கும் விஷ்ணுதர வட்டத்தில் இருக்கும் ஒருவர் அதை அனுப்பி இருப்பார். அந்த மின்னஞ்சலை ஹேக் செய்தால் (கைப்பற்றினால்) போதும். வேகமாக இயங்கினேன். சிலமணிநேர முயற்சிக்குப்பின் அந்த இரண்டு மின்னஞ்சலுக்கும் வந்த எல்லா அஞ்சலையும் எடுத்துவிட்டேன். ஆச்சர்யம் ஒரே ஆள் இரண்டு பேருக்கும் "விஷ்ணு" என்ற பெயரில் மெயில் அனுப்பியிருந்தான். இவன்தான் அந்த இன்போர்மேர் போல.


இது சூரப்புலி கோகுலுக்கு அனுப்பிய மெயில்

"Mr கோகுல்,

s w H2 6F இது தான் குறியீடு கவலை வேண்டாம்"


இது எழுத்தாளர் ஆறுவுக்கு அனுப்பிய மெயில்


"sir, எஸ். பி. கோகுலிடம் தவறானக் குறியீட்டைத்தான் கொடுத்திருக்கிறேன். கவலை வேண்டாம்"


இவ்வளவு தூரம் வந்த என்னால் அந்தக் குறியீட்டிலிருந்து பேரைப் கண்டுபிடிக்க முடியவில்லை. எனக்குத் தெரிந்த எல்லா குறியீட்டு முறைகளிலும் முயற்சி செய்தேன். நேரம் வேறு போய்க்கொண்டிருந்தது. விடிந்தால் அவர்கள் முந்திக் கொள்வார்களே என பயங்கர முயற்சி செய்தேன். அந்த மின்னஞ்சல் மூலம் மெயில் அனுப்பிய விஷ்ணுவின் தொலைபேசி எண்ணைக்கூட கண்டுபிடித்துவிட்டேன். இரண்டு முறை அழைத்தும் பலன் இல்லை. மீண்டும் அழைப்பு, மீண்டும் முயற்சி. உலகின் எந்த முறையிலும் கண்டுபிடிக்க முடியாததாக இருந்தது அந்த குறியீடு. அதை அச்சடித்து மேசையில் பார்த்துக்கொண்டே தூங்கிவிட்டேன்.


--

தொலைபேசி அழைப்பு என் தூக்கத்தை கலைத்தது. அழைத்தது அதே விஷ்ணு. விடிந்து இருந்தது. இந்நேரம் பெயர் வெளியாகியிருக்கும். என்ன செய்வது. தொலைபேசியை எடுத்தேன்.
"நீங்க யார் சார். நெறைய மிச்செடு கால்ஸ் இருந்துச்சு..." என்றபடி ஆரம்பித்தான். நான் என் முழுக் கதையும் சொன்னேன்.


"ஹ ஹ... நானே ஒரு தில்லாலங்கடி... என்கிட்டேயேவா. விஷயம் போகவேண்டியவர்களுக்கு கரெக்டா போயுடுச்சு " என்றான்.


"அதெப்படிங்க.. குறியீடு கண்டுபிடிகிறது நான் ஒரு எக்ஸ்பெர்ட் (நிபுணன்). எனக்குத் தெரியாம என்ன குறியீடு அது" என்றேன் ஆர்வம் தாங்க முடியாமல்.


அவன் மறுபடியும் பெரிதாகச் சிரித்தான். "நான் தான் அது தவறான குறியீடு என்று சொல்லியிருந்தேனே. அதைப் படிக்கலையா நீ" என்றான். இப்படி சொல்லிவிட்டு தொலைபேசியை துண்டித்தான்.


என்ன ஒரு அவமானம்!! இலக்கியத்தில் பரபரப்பைக் கிளப்பும் வாய்ப்பு போய்விட்டதே என்று எண்ணி சூரப்புலியின் தளத்தை திறந்தேன். அதிர்ச்சியானேன். ஆறுவின் தளத்தையும் திறந்தேன். அங்கும் சரியாக இருந்தது. நாமெல்லாம் என்ன தான் பகடி செய்தாலும் எழுத்தாளர்கள் எழுதாளர்கள் தான் என்று புரிந்தது.
எனக்கு தலை சுற்றியது.

ஆம் அந்தப் படத்தின் பெயர்
"கவலை வேண்டாம்!!"

சாரு சொல்வது உண்மையா? வெளிவரும் மர்மங்கள்

கல்லையும் உருக்கும், விக்ரமனையும் மிஞ்சும், ஒரு செண்டிமெண்ட் கடிதம் வரைந்துள்ளார் சாரு. அதைப்படித்த படிக்கும்போதே 'லா லா லா" என்ற விக்ரமன் பட BGM  நம் மனதுள் ஓடுகிறது. கண்களின் கண்ணீர் பெருக்கெடுக்கிறது.
 
இருந்தாலும். இதெல்லாம் உண்மையா நம் வாசகர்கள் நாம் நம்மைக் கேட்கும்பொழுது நாம் என்ன செய்வது. நாமே நம்மை அதே கேள்விகளைக் கேட்டுக் கொண்டோம். 
 
உண்மையில் சாரு எதிரிக்கு எதிரி நண்பன் என்றெல்லாம் நினைப்பவர் இல்லையா? 
 
1. சாரு எதிரிக்கு எதிரி நண்பன் என்று நினைக்கமளிருந்தால்  மாமல்லன், ஜெயமோஹனை விமர்சிக்கும் எல்லாம் எப்படி அவருக்குப் பிடிகிறது.  மாமல்லனாவது ஜெயமோஹனை படிக்கிறார் அப்புறம் விமர்சிக்கிறார். இவர் தான் அவரைப் படிப்பதே இல்லையே, அப்படியெனறால் "படித்ததில் பிடித்தது" எல்லாம் போடுவது யார்??
 
2 . ஜெயமோகன் அவரது வாசகர் வட்டத்தில் எழுதிய கடிதங்கள் இருமுறை சாரு தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. சாரு தான் ஜெயமோகன் எழுதுவதைப் படிப்பதே இல்லையே. அப்படியே படித்தாலும் தூங்கி விடுவாரே. அப்படியென்றால் இதையெல்லாம் சாரு தளத்தில் போட்டது யார். மிக மர்மமாக இருக்கிறதே..சாரு தூங்கும்போது யாரவது பதிவேற்றி விடுகிறார்களா என்ன?
 
சாருவின் கடிதம் உருக்கமான தொனியில் எழுதப்பட்டிருந்தாலும் யோசித்துப் பார்க்கையில் மிக திகிலூட்டுவதாக உள்ளது.

Sunday, October 30, 2011

நண்பேண்டா - புதுமை எழுத்தாளரின் நட்பு அக்கப்போர்

சிலர் நட்பைப் பற்றி பேசுவார்கள். சிலர் எழுதுவார்கள். ஆனால் சிலர் மட்டும் தான் நட்பன்றால் என்ன்னவென்று வாழ்ந்தே காட்டுவார்கள். அப்படியொரு வாய்ப்பை நமக்கெல்லாம் காட்டிவருபவர் புதுமை எழுத்தாளர்.

இதில் விசேஷம் என்னவென்றால் இவரது நட்புக்கள் எல்லாமே இலக்கிய விவாதமாவது தான். இதன் மூலகாக இலக்கிய வாசகர்களுக்கும் நல்லபடியாக பொழுதுபோகிறது.

நான் நமது இலக்கிய அறிவை பயன்படுத்தி ஆராய்ச்சி செய்ததில் இந்த நட்பில் மூன்று நிலைகள் உள்ளன என அறிகிறோம்.

முதலில் முதல் ரவுண்டு. அடுத்து இரண்டாம் ரவுண்டு. அப்புறம் தான் மூன்றாம் ரவுண்டு..

நட்பின் உருகல், நட்பின் அடையாளமாக அந்த நண்பரைப் பற்றிய பாராட்டுக்கள் இப்படி கொஞ்சம் நாள் இருப்பது இது முதல் நிலை. தன் நண்பர் படைப்பது தான் உலக இலக்கியம் என்று கண்டிப்பாக புகழ்ச்சி கிடைக்கும். இது முதல் நிலை.

திடீரென ஒருநாள் விழித்துக்கொண்டு நான் யார் தெரியுமா, நீயல்லாம் ஒரு நண்பனா என்று பரபரப்பாக கட்டுரை எழுதுவது. தன் நண்பன் தனக்குச் செய்த துரோகங்கள் என ஒரு தொடர் கட்டுரை. பல உண்மைகள் வெளிவரும் காலகட்டம் இது. இது இரண்டாம் நிலை.

பொதுவாக இவரால் தாக்கப்படும் முன்னால் நண்பர்கள் இவரை திரும்பத் திட்டுவதில்லை. பதிலும் சொல்வதில்லை. சரியாகச் சொன்னால், இவரை கண்டுகொள்வதில்லை. இப்போது தான் ஒரு ட்விஸ்ட்.. கொஞ்சம் நாள் கழித்து நமது எழுத்தாளரே நட்பின் கதவை மீண்டும் திறப்பார், தயவு செய்து பழசை மறந்துவிடுங்கள் என்று.

வாழ்கை மட்டுமல்ல நட்பும் கூட ஒரு வட்டம் தான் நமக்கு விளங்குகிறது. இது நல்லபடியாக நடந்தால் எல்லோருக்கும் நல்லது. ஆனால் பிரச்சனை என்னவென்றால் இவர் நினைப்பதுபோல் எல்லோருக்கும் நினைவாற்றல் குறைவாக இல்லை என்பதே.

Friday, October 28, 2011

ஏழாம் அறிவும், "பிரபல பதிவரின்" விஷ(ம) விமர்சனமும்

தீபாவளிப் படங்களில் அதிக எதிர்பார்ப்பை உருவாக்கிய படம் ஏழாம் அறிவு. இந்தப்படத்தைப் பற்றி பல பாராட்டுக்களும் விமர்சனங்களும் வந்துகொண்டிருக்கும் நிலையில் சில "பிரபல" பதிவர்களால் கலக்கப் படும் விஷ விமர்சங்களை எதிர்கொள்ள யாருமே இல்லையா என்ற வலையுலகவாசிகளின் குரல் நம்மை அடைந்தது.

பொதுவாக நாம் விமர்சனத்துக்கு எதிரானவர்கள் அல்ல என்றாலும். உள்நோக்கமுடைய விமர்சனங்கள் விமர்சனம் செய்யப்படவேண்டியவையே என்பது நமது கருத்து. (இது பன்ச்!!)

சரி.. அந்தப் பிரபலம் அப்படிஎன்னவெல்லாம் குறை சொல்லியிருகிறார் என்று பார்க்கலாமா?

போதிதர்மன் சீனாவுக்குப் போனாரா என்று திரைக்கதையில் சொல்லப்படவில்லை என்பது ஒரு குறை.. ஆனால் படத்திலேயே காரணம் வசனமாக சொல்லப்படுகிறது. அதை ஒருவர் சுட்டிக்காட்டியும் இந்த பிரபல பதிவரால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதற்குமேல் போதிதர்மன் சீனா சென்றது வரலாறு..வரலாற்றப் படியுங்கள் மக்களே..

இந்தப் படத்தில் தமிழன் என்று வரும் இடங்களிலெல்லாம் தெலுகு டப்பிங்கில் தெலுகு என்று வரும் என்பது இவரது இன்னொரு கவலை. அட ஆண்டவா!இதெல்லாம் ஒரு குறையா? ஏன் தெலுங்கோடு நிறுத்திவிட்டார் என்று தெரியவில்லை. டப்பிங் என்றால் எந்த மொழியிலும் செய்யலாமே. சினிமா தெரிந்த எல்லோருக்கும் இது தெரியுமே? இவருக்கு புரியாதது என்னவென்றால் போதிதர்மன் என்பது ஒரு வரலாற்றுப் பாத்திரம். எந்த மொழியில் டப்ப்பிங் செய்தாலும் போதிதர்மன் காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் என்ற வரலாறு மாறாது என்பதையே.

தமிழர் உணர்வு வியாபாரமாக்கப் படுகிறது என்பது இவரது இன்னொரு கவலை. கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் பாஸ். ஒரு கூட்டத்தில் சென்று "நாங்கெல்லாம் தமிழர்கள் எங்களுக்கே உதவியா" என்று தமிழர் தன்மானம் போங்க பிரச்சனை செய்தவர்கள்தானே நீங்கள். ஒரு சாதாரண விஷயத்துக்கே அவ்வளவு தமிழ் உணர்வு பேசிய நீங்கள், இந்தப் படத்தில் வரலாற்றோடு இணைத்து ஒரு கதையைச் சொன்னால் கோபப்படலாமா? கொஞ்சம் யோசிங்க ப்ளீஸ்.. நம்ம வரலாற்றையும் கொஞ்சம் யோசிக்கணும் இல்ல..

அதாவது சார், விமர்சனம் இருக்கலாம் ஆனால் அதுவே விஷமாக இருக்கக்கூடாது.. (முடிக்கும்போது ஒரு பன்ச்!!)

எதோ பார்த்துப் பண்ணுங்க சார்..

டிஸ்கி.:
இது அந்த விமர்சனத்துக்கான விமர்சனமே தவிர படத்திற்கான விமர்சனம் அல்ல.

Wednesday, October 26, 2011

சாருவின் புத்தகம் லீக் - லேட்டஸ்ட் இலக்கிய அக்கப்போர்

சாருவின் அடுத்த நாவல் பற்றிய செய்திகள் வந்தவண்ணம் இருக்கின்றன. இந்த நாவல் தமிழ் விற்பனை வரலாற்றில் ஒரு சாதனை படைக்கவிருப்பதாகவும், இந்த நாவலுக்கு பலத்த எதிர்பார்ப்பு இருப்பதாகவும் இந்த செய்திகள் சொல்கின்றன.


ஆனால் விசாரித்துப் பார்த்ததில் இந்த இரண்டு செய்திகளையும் சாருவே தான் பரப்பி வருவதாகத் தெரிகிறது!!


இந்த பரபரப்பான சூழ்நிலையில் இந்த நாவலின் முக்கிய விஷயம் லீக் ஆகிவிட்டது அவரது ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

"பணம் சம்பாரிப்பது எப்படி?" - இது தான் இந்த நாவலின் முக்கிய கருத்தாக சொல்லப்படுகிறது. பொதுவாகவே தமிழ்நாட்டில் நாவல்களை விட சுய முன்னேற்ற புத்தகங்கள் தான் அதிகள் விறபது எல்லோருக்கும் தெரிந்ததே. இதை பயன்படுத்துக்கொண்டுள்ள புதுமை எழுத்தாளர் சாரு, தானே ஒரு சுயமுன்னேற்ற புத்தகம் எழுதி அதை நாவலாக வெளியிடவிருக்கிறார் என்று தெரியவருகிறது.

இதில் இதுமட்டுமல்லாமல் "சிட்டுகுருவி லேகியம் செய்யவது எப்படி?", "சுவையான சமையல் செய்வது எப்படி?" போன்ற பல பளீர் கருத்துகளையும் சொல்லியுள்ளார்.

"தேர்வுக்குப் படிப்பது எப்படி?" , "அழகு குறிப்புகள்". "ஜாதகம் பார்ப்பது எப்படி" போன்ற கருத்துக்கள் அடுத்த நாவலாக வரும் என்று தெரிகிறது.

எல்லா பதிப்பகங்களின் "எப்படி" ரக புத்தகளின் பட்டியல் சாரு வசம் இருப்பதினால் பல பதிப்பகங்கள் கலக்கத்தில் இருப்பதாகத் தெரிகிறது. இவ்வொரு புத்தகமும் ஒவ்வொரு தலைப்பில் நாவலாக வரும் என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எகிறிக் கிடக்கிறது.

ஆனால், இந்த நாவலின் முக்கிய விஷயம் லீக் ஆனது இலக்கிய வட்ட்ராரத்தில் அதிர்ச்சி அலைகளை உருவாகியுள்ளது.


அந்த முக்கிய விஷயமான பணம் சம்பாரிக்கும் ரகசியம் இது தான்..

"....எனவே, நான் எப்படி பணம் சம்பாரிப்பது எப்படின்னு விளம்பரம் பண்ணி எல்லோர்கிடேயும் புத்தகம் விற்று பணம் சம்பாதிகிறேனோ, அதே போல் நீங்களும் "பணம் சம்பாரிப்பது எப்படின்னு விளம்பரம் செய்து பணம் சம்பாரியுங்கள்.. " -இப்படி போகிறது அந்த பணம் சம்பாரிக்கும் ரகசியம்.


எப்படியோ இந்த செய்திகளின் மூலம் மக்கள் மத்தியில் இலக்கிய தாகம் அதிகமாகிவருவது பரபரப்பை உருவாக்கிவருகிறது.

Friday, October 7, 2011

காதல் தூசி

காத்திருந்த நம்மை
பேருந்து கடந்துசெல்ல
தெருவில் கிளம்பியது தூசி.

தூசியை மறைக்க நீ துப்பட்டாவை எடுத்து முகம் மூட
மறைக்கப் படாததைப்
பார்த்த என் மனதில் எழுந்தது
காதல் தூசி.